இந்திய பாரம்பரியங்களை பறைசாற்றிய கோவை விழா பேரணி !!!

கோவை விழாவின் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பேரணி நடைபெற்றது.

 

கோவை மாவட்டத்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ‘ கோவை விழா ‘ கொண்டாடப்பட்டு வருகிறது.10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்காக கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள், புட் ஸ்டிரீட் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.அந்த வகையில் நடப்பாண்டில் இவ்விழா கடந்த 3ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 12வது ஆண்டாக நடைபெறும் இந்த விழா வரும் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், கோவை விழாவின் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு பாரம்பரிய உடைகள் அணிந்து வந்த மக்கள் பேரணி நடத்தினர். கோவையில் வாழும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பாரம்பரிய உடைகள் அணிந்தும், நடனமாடியும் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பேரணி சென்றனர். பேரணியை பாரதிய வித்யா பவனின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கொடியசைத்து துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிறுதுளி அமைப்பின் நிர்வாகி வனிதா மோகன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், அதிமுக பிரமுகர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் இதில், தமிழ், தெலுங்கு, குஜராத்தி, பஞ்சாபி உள்ளிட்ட பாரம்பரிய உடைகள் அணிந்தும், அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்ப இசை கருவிகளால் இசைத்தும் பேரணி நடத்தப்பட்டது.

இதுகுறித்து கோவை விழா பேரணியின் தலைவர் அபிஷேக் கூறுகையில், “12வது ஆண்டாக நடைபெறும் இந்த கோவை விழாவில், 2வது முறையாக இந்த பேரணி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 16 சங்கங்களை சேர்ந்த பல்வேறு மாநில மக்கள் கலந்து கொண்டனர். 4 மாத குழந்தை முதல் 92 வயது முதாட்டி வரை இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.” என்றார்.


Leave a Reply