திருப்பூர், திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி ரிங்ரோடு கேது கோவில் அருகே வசித்து வருபவர் சக்திவேல் (வயது 54). இவர் அப்பகுதியில் 5 பசு மாடுகளை வைத்து பால் கறந்து விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது பசு ஓன்று இரண்டு கன்றுகளை ஈன்றது. தினமும் இவர் காலை தனது பசுமாடுகளை அவிழ்த்து விட அவைகள் அப்பகுதியில் உள்ள தோட்டங்களில் மேய்ந்து பின்னர் மாலை வீடு திரும்பி விடும்.
இந்தநிலையில் கன்றுகளை ஈன்ற பசு ஒன்று அப்பகுதியில் உள்ள நெசவாளர் காலனி விரிவாக்கம் பகுதியில் உள்ள குறுக்கு சந்தில் மேய்த்து கொண்டிருந்தது. அப்போது, அப்பகுதியில் ஒண்ணரை அடி அகலத்தில் 8 அடி ஆழத்தில் சென்று கொண்டிருந்த சாக்கடை கால்வாயில் மதியம் 12 மணிக்கு தவறி விழுந்தது.
அப்போது சாக்கடை கால்வாய் அகலம் குறைவாக இருந்ததால் கால்கள் மடங்கிய நிலையில் அப்படியே 8 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டு தவித்தது. உடனே அப்பகுதி பொதுமக்கள் அந்த பசுவை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் எப்படி எடுப்பது என்று தெரியாமல் தவித்தனர்.
பின்னர் அவர்கள் அவிநாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலை அதிகாரி பாலசுப்பிர மணியம் தலைமையில் தலைமை காவலர் விக்டர் சேவியர், தீயணைப்பு வீரர்கள் சீனிவாசன், பார்த்தீபன், சதீஷ்குமார், கார்த்திக் ஆகியோர் கொண்ட குழுவினர் முதலில் கயிறுகளை கொண்டு மீட்க முயற்சித்தனர். ஆனால் பசுவானது நன்றாக சாக்கடை கால்வாயில் சிக்கிக்கொண்டதால் உடனே மீட்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து அருகில் இருந்த திட்டுக்கற்களை உடைத்ததுடன் பல்வேறு முயற்சிக்கிடையே மாலை 5 மணியளவில் பசு மாட்டை சுற்றி பெல்ட்டை கட்டி பாதுக்காப்பாக கிரேன் மூலம் மேலே தூக்கி மீட்டனர். இதன்மூலம் 4 மணி நேர பசு மீட்பு பணி நிறைவடைந்தது.
இந்த மீட்பு பணியில், பசுவுக்கு உடல் முழுவதும் கற்களில் சிக்கி சிராய்ப்பு ஏற்பட்டது. மேலும் அதன் கொம்பும் உடைந்து ரத்தம் கொட்டியது பசுவின் கால்கள் மடங்கி இருந்ததால் அதனால் நடக்க முடியவில்லை. நொண்டிக்கொண்டே சென்றது. பெண்கள் பசுவுக்கு வாழைப்பழங்கள் கொடுத்தனர்.
தீயணைப்பு அதிகாரி பாலசுப்பிர மணியம் பசுக்களை இப்படி தெரியாமல் கண்ட இடத்தில மேய்க்கக்கூடாது என்று அதன் உரிமையாளர் சக்திவேலை எச்சரித்து அனுப்பினார். பல சிரமத்திற்கு இடையே பசுவை மீட்டதற்கு பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்து தீயணைப்பு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.