எம்.எல்.ஏ பதவி ராஜினாமா வாபஸ்..!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் அம்பை தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையை விட 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தவெக ஆட்சிக்கான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமை மீதான அதிருப்தியால், அதிமுகவின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் இணைந்து இசக்கி சுப்பையாவும் செயல்பட்டார்.
அதைத் தொடர்ந்து, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை சபாநாயகரிடம் நேரில் சென்று அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்த அதே நாளில், சென்னை பனையூரிலுள்ள தவெக தலைமையகத்திற்குச் சென்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் முறைப்படி அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
தற்போது தவெகவின் நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள இசக்கி சுப்பையா, சட்டப்பேரவை செயலரிடம் தான் வழங்கிய ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக வலியுறுத்தி கடிதம் அளித்துள்ளார்.
அதில், தனது ராஜினாமாவை ஏற்க வேண்டாம் என்றும், தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்ற விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ராஜினாமாவை திரும்பப் பெறுவதற்கு சட்டப்பேரவை விதிகளில் இடமில்லை என்றும், அம்பாசமுத்திரம் தொகுதி ஏற்கனவே காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டுவிட்டதாகவும் சட்டப்பேரவை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுவதே அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இசக்கி சுப்பையா அளித்த கடிதத்திற்கு சட்டப்பேரவை செயலகம் சார்பில் பதில் கடிதம் அனுப்பப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ இசக்கி சுப்பையா, ஒன்று இடைத்தேர்தலை அறிவியுங்கள், இல்லையென்றால் எம்எல்ஏவாக செயல்பட விடுங்கள் என திட்டவட்டமாக கூறினார். அதிமுகவை உருவாக்கியது எம்ஜிஆர், காத்தது ஜெயலலிதா, அழிப்பது யார் என மக்களுக்கே தெரியும் எனவும் இசக்கி சுப்பையா தெரிவித்தார்.
இதனிடையே, அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து அதிமுக கொறடா தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ. இல்லாததால், தொகுதி மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இடைத்தேர்தல் தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை தன்னை எம்.எல்.ஏ.வாக தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் இசக்கி சுப்பையா தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த கூடுதல் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மேலும், ராஜினாமாவை ஏற்ற சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




