வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் பெரும் வீடியோ வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஒரு இடத்தில் வீடு ஒன்றில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. அருள் என்பவரது வீட்டிற்கு எப்போது போனாலும் கள்ளச்சாராயம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. சாட்சியாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் வீட்டு வாசலில் ஆண் ஒருவர் நிற்கிறார் வீட்டிற்குள் இருந்து வரும் பெண் ஒருவர் அவரிடம் கள்ளச்சாராயத்தை கொடுக்கிறார். நேரம் காலம் என்று நடக்கும் இந்த சாராய விற்பனை குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு வேலூர் காவல் கண்காணிப்பாளரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது.
மேலும் புகார் கொடுப்பவர்களுக்கு கள்ளச்சாராய வியாபாரிகள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது கள்ளச்சாராய விற்பனை ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர்கள் மீண்டும் மீண்டும் அதே குற்றத்தை செய்வதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். சாராய விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.