நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரு தொகுதிகளிலும் காவல்துறையினருடன் துணை ராணுவ படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காமராஜர் நகர் தொகுதியிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் போட்டியிடுகின்றனர். விக்கிரவாண்டியில் அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும், நாம் தமிழர் சார்பில் கந்தசாமியும் களத்தில் உள்ளனர். இந்த தொகுதிகளில் இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 24-ந் தேதி எண்ணப்பட உள்ளன.
மகாராஷ்டிரா, அரியானா ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் இன்று காலை தொடங்கியது. இந்த இரு மாநிலங்களிலும் தற்போது ஆளும் பாஜக , மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா ? என்பதும் வரும் 24-ந் தேதி தெரிந்துவிடும்.