வடகிழக்கு பருவமழை தீவிரம் – 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய,விடிய கனமழை பெய்த நிலையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு நாள் முன்னதாகவே நேற்று துவங்கி விட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய கனமழை பெய்தது.சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி, பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

 

இன்று காலை முதலும் சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதேபோல் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பூர், கோவை திண்டுக்கல், மதுரை, விருதுநகர்,தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது. இன்று காலை 5.30 மணி வரை சென்னை அடுத்த பூந்தமல்லியில் அதிகபட்சமாக 6 செ.மீ மழை பதிவாகி இருந்தது.

இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

அதில், தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மட்டுமின்றி கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என அறிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Leave a Reply