விக்கிரவாண்டி, நாங்குநேரியில் பிரசாரம் அனல் பறக்குது: கடைசி நாளில் களத்தில் குதிக்கும் விஜயகாந்த்!

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நாளை மறுநாளுடன் பிரச்சாரம் முடிவடைவதால், திமுக, அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்தும் பிரச்சாரத்தின் கடைசி நாளான நாளை மறுநாள் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் ஓட்டு வேட்டை நடத்த உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், திமுக சார்பில் புகழேந்தி ஆகியோரும் போட்டியிடுகின்றனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக தரப்பில் நாராயணனும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரனும் களத்தில் உள்ளனர்.

இந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவும் திமுகவும் கடும் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன. இதனால் ஆளும் கட்.சியான அதிமுகவின் அமைச்சர்கள் பட்டாளம் முழுவதுமே தொகுதியில் முகாமிட்டுள்ளனர்., திமுக தரப்பிலும் ஒட்டு மொத்த நிர்வாகிகளும் குவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட கட்சியின் முக்கியத் தலைவர்களும், அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒபன்னீர்செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களும் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளனர்.

 

தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டே நாட்கள் தான் உள்ள நிலையில் இரு தொகுதிகளிலும் பிரச்சாரம் அனல் பறக்கிறது.அத்துடன் வாக்காளர்களுக்கு இரு கட்சிகளின் சார்பிலும் ஏக கவனிப்பும் நடைபெறுகிறது.

 

விக்கிரவாண்டி தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் கூட்டணியில் உள்ள பாமக மற்றும் தேமுதிக தலைவர்களையும் அதிமுக களமிறக்கியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாததால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, ஓய்வெடுத்து வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் குதிக்க உள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நாளை மறுநாள் விக்கிரவாண்டி தொகுதியில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின் போது கடைசிக் கட்டத்தில் சென்னை நகரில் மட்டும் காரில் அமர்ந்தபடி விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பேச்சு சரிவர வராததால் திக்கித் திணறி ஓரிரு வார்த்தைகளை சிரமப்பட்டு உச்சரித்தார். பின்னர் சைகை மூலமே ஓட்டு வேட்டை நடத்தினார்.

 

தற்போது 6 மாத இடைவெளிக்குப் பின்பு, விக்கிரவாண்டி தொகுதியில் விஜயகாந்த் ஒரு நாள் தேர்தல் பிரச்சாரம் செய்ய வருவதால் அவரைக் காணவும், அவருடைய பேச்சு எப்படி இருக்கும் என்பதைக் கேட்கவும் தேமுதிக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அவருடைய வரவை ஆர்வமாக எதிர்பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply