36 ஆண்டுகளுக்குப் பின்… சென்னை to யாழ்ப்பாணம் விமான சேவை தொடங்கியது

இலங்கையில் நடந்த உள்நாட்டு போரால் 36 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறக்கப்பட்டு சென்னையிலிருந்து முதல் விமானம் புறப்பட்டுச் சென்றது.

 

இலங்கையின் வடக்குப் பகுதியில் முழுக்க தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணம் அருகே பலாலியில் விமானப் படை தளம் உள்ளது. இரண்டாம் உலகப்போரின் போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இந்த விமானப் படைத்தளம் பயணிகள் விமான போக்குவரத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் வழியாக கொழும்புக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன.

 

1983-ல் உள்நாட்டு போர் வெடித்ததால் யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை நிறுத்தப்பட்டது. 2009-ல் விடுதலைப் புலிகளுடனானஉள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தவுடன் இந்த விமான நிலையம் மீண்டும் புனரமைக்கும் பணி தொடங்கியது. இதற்கு இந்திய அரசும் நிதியுதவி செய்தது. பல்வேறு இடையூறுகளால் தாமதப்பட்டு வந்த சீரமைப்பு பணிகள் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனால் பலாலி விமான தளம் என்ற பெயரும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 

கடந்த செவ்வாய்க்கிழமை சென்னையிலிருந்து இந்திய விமான தொழில்நுட்ப நிபுணர்களுடன் சென்ற அலையன்ஸ் ஏர் விமானம் இந்த விமான நிலையத்தில் தரையிறங்கி வெள்ளோட்டம் விடப்பட்டது.இதைத் தொடர்ந்து
யாழ்ப்பாணம் விமான நிலையத்தினை இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இன்று திறந்து வைத்தார். இதில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங் கேவும் பங்கேற்றார்.

36 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் முதல் விமான சேவையாக சென்னையிலிருந்து ஏர் இந்தியா விமானம் இன்று காலை 8.45 மணிக்கு புறப்பட்டுக் சென்றது. தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி ஆகிய விமான நிலையங்களிருந்து விமானங்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கியுள்ளதால் ஒரு மணி நேர பயணத்தில் சென்றடைய முடியும் என்பதால் இலங்கை வடக்குப் பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

கடந்த 36 வருடங்களாக
தமிழகத்திலிருந்து இலங்கையின் வடக்குப் பகுதிக்கு செல்ல வேண்டுமெனில் கொழும்புக்கு விமாை த்தில் சென்று, அங்கிருந்து சுமார் 400 கி.மீ. தூரத்தை சாலை வழியே கடக்க வேண்டியிருந்தது. இதற்கு கொழும்புவுக்கு விமானம் மூலம் சென்று பின்னர் யாழ்பாணத்திற்கு 400 கி.மீ தூரத்தை சாலை வழியாக 8 மணி நேரம் பயணிக்க வேண்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply