அமெரிக்கா சீனா ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக உலகில் நான்கு பெரிய விமான படையை கொண்டது இந்திய விமானப்படை. வானத்தைத் தொடும் வல்லமை என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும் இந்திய விமானப்படை போர்க் காலங்களில் மட்டுமின்றி பல்வேறு இயற்கை பேரிடர் காலங்களிலும் திறம்பட செயல்பட்டு வருகிறது.
ஜெர்மனி ஜப்பான் ஆஸ்திரேலியா நாடுகளை விட அதிக திறன் வாய்ந்த இந்திய விமானப்படை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு விமானப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் டெல்லியில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தை ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் விமானப்படை தளபதி கப்பற்படை தளபதி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.
இந்நிலையில் விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் இன்றைய தினத்தில் நமது விமான வீரர்கள் மற்றும் அவரது குடும்பங்களுக்கு நாடு பெருமையுடன் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து இந்திய விமானப்படை மிகுந்த அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் இந்தியாவிற்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறது என்றும் அவர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.






