தமிழ்நாட்டில் நடப்பாண்டு பருவமழை தீவிரமாக இருக்கும்!
தமிழ்நாட்டில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் என எல் நினோவின் தாக்கம் தொடர்பான நிபுணர் குழு தமிழ்நாடு அரசுக்கு அளித்த பரிந்துரை அறிக்கையில் தெரிவித்துள்ளது. எல் நினோவின் தாக்கத்தை ஆராய்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பாலாஜி நரசிம்மன் தலைமையில் 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்த குழு, குறுகிய காலம், நடுத்தர காலம், நீண்ட காலம் என 3 செயலாக்க காலங்களில் பல்வேறு துறைகளின் கீழ் சில பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, வடகிழக்கு பருவமழைக்கு முன்பான குறுகிய காலத்தில், முக்கிய நீர் நிலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே வானிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடும் வெப்பம் நிலவும் நாட்களில் பள்ளி நேரத்தை மாற்றுவது, வெளிப்புற விளையாட்டுகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு, மலேரியா, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்களை கண்காணித்து அத்தியாவசிய மருந்தைகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
2027 ஆம் ஆண்டு கோடை காலத்தை கருத்தில் கொண்டு நீரை சிக்கனமாக பயன்படுத்தக் கூடிய பயிர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 2026 வடகிழக்கு பருவமழையின் போது சில பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கனமழையும், ஒரு சில பகுதிகளில் மழை குறைந்த வறட்சி ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக நிபுணர் குழு எச்சரித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





