மைல் கல்லிற்கு மாலையிட்டு ஆயுத பூஜை கொண்டாடிய நெடுஞ்சாலைத்துறையினர் !!!

நவராத்திரி விழாவின் முக்கிய அம்சமான மகிசாசூரணை வதம் செய்ய பயன்படுத்திய ஆயுதங்களுக்கு பூஜை செய்ததை ஆயுத பூஜையாகவும், அதன் வெற்றியை கொண்டாடும் விஜய தசமி கொண்டாடப்பட்டு வருகிறது.முப்பெரும் தேவியர் ஒன்றாக சேர்ந்து அம்பிகையாகி ஒன்பது நாள் விரதம் இருந்து மகிசாசூரணை வதம் செய்ததை கொண்டாடும் நாள் தான் விஜய தசமி. அப்படி மகிசாசூரணை வதம் செய்வதற்கு முன்னர் அம்பிகை ஏந்தியுள்ள ஆயுதங்களுக்குச் சிறப்பு பூஜை செய்ததை கொண்டாடும் விதமாக தான் ஆயுத பூஜை கொண்டாடி வருகின்றோம்.

 

அந்த வகையில் நம் வாழ்க்கைக்கு மூலதனமாக இருக்கும் நம் தொழிலுக்குத் தேவையான பொருட்களை வைத்து அதை தெய்வமாக எண்ணி பூஜை செய்யும் நாள் தான் ஆயுத பூஜை தினமாக கொண்டாடி வருகிறோம்.தமிழகத்தில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி திங்களன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ,மறுநாள் செவ்வாயன்று விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது.

 

இதில் சரஸ்வதி,ஆயுத பூஜை தினத்தன்று வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆப்பிள்,மாதுளை,சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகள்,இனிப்பு,பொரிகடலை,வேக வைக்கப்பட்ட பயறு வகைகளை வைத்து சரஸ்வதி தேவிக்கு படையலிட்டு பூஜை செய்து பிரசாதத்தை அண்டை வீடுகளுக்கு கொடுத்து மகிழ்வது வழக்கம்.

அதன் ஒருபகுதியாக கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் சாலையில் பூலுவப்பட்டி அருகே நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் சத்ய நாராயணா தலைமையிலான ஊழியர்கள் தங்களது தொழிலுக்கு உதவியாக இருக்கும் இயந்திரங்கள்,மண்வெட்டி,கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து மைல் கல்லிற்கு மாலையிட்டு பூஜை செய்து வழிபட்டனர்.

 

தங்கள் தொழிலுக்கு தேவையான உபகரணங்களை வைத்து பூஜை செய்து வரும் இவ்வேளையில் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்லும் தொலைவை குறிக்கும் மைல் கல்லிற்கு நெடுஞ்சாலைத்துறையினர் மாலையிட்டு,படையலிட்டு பூஜை செய்தது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Leave a Reply