எய்ம்ஸ் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருண்ஜேட்லியின் உடல்நிலை மோசமானதால் அவரை பார்க்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் நள்ளிரவில் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருண்ஜேட்லி (66). இவர் முன்னாள் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தோல் புற்றுநோய் காரணமாக நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார்.
இதனால் கடந்த முறை இடைக்கால பட்ஜெட்டை கூட தாக்கல் செய்ய முடியாமல் அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்தார். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், உடல்நிலை பாதிப்பால் தான் ஓய்வெடுக்க வேண்டும் என்பதால் தனக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டாம் என கடிதம் அளித்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு அருண் ஜேட்லியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜேட்லியை மருத்துவமனையில் சந்தித்துவிட்டு சென்றார். பின்னர் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தனும் மருத்துவமனைக்கு விரைந்தார். இவர் சென்றதும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மருத்துவமனைக்கு நள்ளிரவில் வருகை தந்தார். இதனால் அருண்ஜேட்லியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதா என்ற கவலையில் தொண்டர்கள் உள்ளனர்.