அரசு மருத்துவமனையில் தேவையற்ற தொழில்நுட்ப பொருட்களுக்கான ஏலம் ரத்து

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தேவையற்ற நிலையில் உள்ள தொழில் நுட்ப பொருள்களுக்கான முந்தைய ஏல அறிவிப்பினை ரத்து செய்து புதிய ஏல அறிவிப்பினை வெளியிடுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை குறுக்குபேட்டையை சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

 

அதில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தேவையற்ற நிலையில் உள்ள தொழில்நுட்ப பொருட்கள் முறையான குழு அமைத்து ஆய்வு செய்யப்படவில்லை என குறிப்பிட்டு இருந்தார். ஏலத்தின் போது குறைந்தபட்சமாக 25,000 ரூபாயை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விதி மீறப்பட்டு பல லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் ஒப்பந்த தேதிக்கு முன் கூட்டியே ஒப்பந்தத்தை முடித்து விட்டதாக குறிப்பிட்ட மனுதாரர் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

 

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 19 அன்று அறிவிக்கப்பட்ட ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும், அரசு மருத்துவமனையின் விதிகளுக்கு உட்பட்ட புதிய ஏல அறிவிப்பினை வெளியிட்டு அதன் விதிப்படி ஏலம் நடத்த வேண்டும் என்று ராஜாஜி அரசு மருத்துவமனையின் டீனுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


Leave a Reply