தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரம்..!
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் ஒரு மாணவர் காய்ச்சலால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சலின் பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
மாநிலம் முழுவதும் வியாழனன்று 1,320 பேருக்குக் காய்ச்சல் கண்டறியப்பட்டதில், 244 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. சராசரியாக தினசரி 200 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்படுவதாக தெரியவந்துள்ளது.
தலைநகர் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 156 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 87 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாநில அளவில் டெங்கு பரவலில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மேலும் செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
நடப்பாண்டில் செப்டம்பர் 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 16,577 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொசுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 25,000க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்புப் பணியாளர்கள் தீவிரப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், கடந்த 7 நாட்களில் டெங்கு பாதிப்பு சற்று அதிகரித்திருந்தாலும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தவெக அரசின் அலட்சியப் போக்கே டெங்கு பரவலுக்குக் காரணம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் அதிகம் கூடுமிடங்களில் நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுரக் குடிநீரைப் போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




