டிக் டாக்கில் சாதி குறித்து விமர்சன பதிவு ஒரு கொலை! ஒரு தற்கொலை

டிக் டாக்கில் சிலர் தங்களது நடிப்பு திறமைகளை வெளிக்காட்டி லைக்குகளை அள்ளுகின்றனர். சிலரோ தேவையற்ற செயல்களை செய்து, தேவையற்றதை பேசி போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். அந்த வரிசையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே குறிப்பிட்ட சாதியை விமர்சித்து வெளியிட்ட டிக் டாக் வீடியோ இரண்டு இளைஞர்களின் உயிர் பறிபோக காரணம் ஆகியுள்ளது.

 

திருத்தணியை அடுத்த தாளவேடு கிராமத்தை சேர்ந்த வெங்கட்ராமன் என்ற இளைஞர் நண்பன் விஜயன் என்பவருடன் சேர்ந்து குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும்படி பேசியுள்ளார். அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை அறியாமல் டிக் டாக்கில் விடேயோவாக பதிவேற்றம் செய்து இருக்கிறார் நண்பன் விஜயன். அதன் பின்னர் அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து அதே பகுதியை சேர்ந்த அந்த குறிப்பிட்ட சமூகத்தினர் கடந்த பிப்ரவரி மாதம் தங்களது சமூகத்தை அவதூறாக பேசிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

இதனையடுத்து திருத்தணி போலீசார் வெங்கட்ராமன் மற்றும் விஜயன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து தேடி வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இருவரும் கூட்டாக மது அருந்தி கொண்டிருக்கும் போது வீடியோ பதிவேற்றம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கட்ராமன் கூட்டாளி விஜயனின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி கொலை செய்துள்ளார்.பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று நண்பரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டு வெங்கட்ராமன் சரண் அடைந்தார்.

 

இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கபட்டு கடந்த மாதம் 17 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த வெங்கட்ராமன் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார். மன குழப்பத்தில் தவித்து வந்துள்ளார். இந்த நிலையில் செவ்வாய் கிழமை காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட்ட வெங்கட்ராமன் அங்கிருந்து கார்த்திகேயன் புறத்தில் உள்ள ஏரிக்கறைக்கு சென்று குளிர் பானத்தில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Leave a Reply