திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் தேரோட்டம்: அரோகரா’ அரோகரா” கோஷமிட்டு பக்கதா்கள் பரவசம்!
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மையானதும், மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய 3 சிறப்புகளை பெற்றதும், சுந்தரமூர்த்தி நாயனரால், தேவராம் பாடப்பெற்றதுமான திருமுருகநாத சுவாமி கோயில் கொங்கு நாட்டுக்குட்பட்ட திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ளது. இங்கு அக்னி தீர்த்தம், செண்பக தீர்த்தம், கங்கா தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ஞான தீர்த்தம், சண்முக தீர்த்தம், மகாமக குளத்தீர்த்தம் என 7 தீர்த்தக் குளங்கள் உள்ளது. இந்த குளத்தில் குளிப்பவர்களின் நோய்கள் குணமாகிறது. மேலும் மனநிலை குன்றியவர்கள் இங்கு தங்கி தீர்த்தக்கிணற்றில் குளித்து நோயை தீர்த்து செல்வது இன்றும் நடைபெற்று வருகிறது.
மாசிமகம் என்பது மாசி மாத பவுர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பான நாளாகும். இதனால், திருமுருகன்பூண்டி, திருமுருகநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 10 ந் தேதி ஸ்ரீ முயங்கு பூண்மூலை வல்லியம்மை உடனமர் ஸ்ரீ திருமுருகநாத சுவாமியின் அனுமதி பெற்று கிராம சாந்தி பூஜை மற்றும் விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

பின்னர் 11ந் தேதி பூமி பூஜை, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்த பின்னர் மகம் நட்சத்திரத்தில், பிரமாண்டமான கொடிமரத்தில் கொடியேற்றப் பட்டது. இதையொட்டி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா நடந்தது. தேர்த்திருவிழாயொட்டி இன்று 12 ந் தேதி சனிக்கிழமை சூரிய, சந்திர மண்டல காட்சிகளும், 13 ந் தேதி ஞாயிறு பூதவாகன மற்றும் சிம்ம வாகன காட்சிகளும், 14 ந் தேதி புஷ்ப விமானக்காட்சியும், 15 ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் திருமுருகநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், 16 ந் தேதி திருக்கல்யாணம் மற்றும் யானை வாகன, அன்ன வாகன காட்சிகள் பல்வேறு சிறப்பு பூஜைகளும் நடந்தது.
இதனைத்தொடர்ந்து நேற்று (17 ந்தேதி ) மகம் நட்சத்திரத்தில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் என்னும் தேரோட்டம் நடந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலையில் விநாயகர், திருமுருகநாதர், வள்ளி, தெய்வானை, பார்வதி, சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி ரத தரிசனம் நடைபெற்றது. மாலை 3 மணிக்கு தமிழக அரசு உத்தரவுப்படி திருமுருகநாதர் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில், ஆன்றோர் பெருமக்கள், பொதுமக்கள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் திருப்பூர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தாரின் கைலாய வாத்தியத்துடன் அரோகரா கோஷம் முழங்க திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

முதலில் திருமுருகநாதர் சுவாமி (சோமாஸ்கந்தர்) தேரோட்டம் நடந்தது. இதைத்தொடர்ந்து சண்முகநாதர் உடனமர் வள்ளி தெய்வானை தேரோட்டம் நடந்தது. இதனைத்தொடர்ந்து அம்பாள் முயங்குபூண்முலை வல்லியம்மை தேரோட்டம் என மூன்று தேர்களும் ஒரே நாளில் இழுக்கப்பட்டு மீண்டும் புறப்பட இடத்தில் நிலைநிறுத்தப்பட்டது. திருமுருகன்பூண்டி கோவில் தக்கார் பெரியமருது பாண்டியன் மேற்பார்வையில் செயல் அலுவலர் சந்திரமோகன் முன்னிலையில் மிராசுதாரர்கள் உடனிருக்க பூஜையை திருமுருகன்பூண்டி பரம்பரை குருக்கள் பாலாஜி மற்றும் முத்து சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் முத்துக்குமார், உமாபதி, சுந்தரம் ஆகியோர் கொண்ட சிவாச்சியார்கள் குழுவினர் செய்தது இருந்தனர்.
திருமுருகன்பூண்டி போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நகராட்சி நிர்வாகத்தினர், கூடுதல் எல்இடி மின்விளக்குகள் பொருத்தி, குடிநீர் வசதியுடன், தூய்மைப் பணி மேற்கொண்டனர். இதனையடுத்து இன்று 18 ந் தேதி ம் தேதி பரிவேட்டை, குதிரை, சிம்ம வாகன காட்சியும் 19 ந் தேதி தெப்பத்தேர் திருவிழா நடக்க உள்ளது. இதற்கு பொதுமக்கள் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். வருகிற 20 ம் தேதி கூப்பிடு விநாயகர் கோவிலில், பூண்டி கோவில் தல வரலாற்றில் இடம் பெற்ற ஸ்ரீசுந்தரர் வேடுபறி திருவிழா நடக்கிறது. வரும் 21 ந் தேதி பிரம்மதாண்டவ தரிசன காட்சி, 22 ந் தேதி தேதி மஞ்சள் நீர் விழா, மயில் வாகன காட்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.





