அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலையில்லாமல் வந்த இளைஞர்..!
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தலையில்லாத இளைஞரொருவர் ஏற்படுத்திய நூதன விழிப்புணர்வு காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வரும் சூழலில் தேர்தல் பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
தேர்தலுக்கு ஓரிரு நாட்களே இருக்கும் பட்சத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தின் சார்பில் தன்னார்வலர்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் சென்னை அருகே தலை இல்லாத மனிதர் ஒருவர் வாக்களிக்கும்படி ஏற்படுத்திய விழிப்புணர்வு அனைவரையும் அச்சமடையச் செய்தது. காதலன் படத்தில் பிரபுதேவா தலையில்லாமல் வருவது போன்று மணிமங்கலம் பகுதியை சேர்ந்த மதன் குமார் என்பவர் ஆடைகளால் தனது தலையை மறைத்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தார்.
தலைக்கு பதிலாக அதன் மீது வாக்களிப்பதை குறிப்பிடும் கை விரலையும் பொருத்தியிருந்த அந்த இளைஞர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் வலம் வந்தார்.






