--- --:--:-- --

உயிரிழந்த சுர்ஜித்தின் தொடக்கம் முதல் இறுதி வரை!

9

திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்த குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் வீட்டின் அருகே ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தை சுர்ஜித் விழுந்ததையடுத்து குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. 28 அடி ஆழத்தில் இருந்தபோது குழந்தை முழு விழிப்புணர்வுடன் இருந்தது.

 

குழந்தை பயப்படுமோ என அஞ்சி அவரது அம்மா ஆறுதலாக பேசிய பேச்சுகளை கேட்டு அக்குழந்தை பதிலளித்தது. குழந்தையை கயிறு கட்டி மீட்பதற்கான முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய நிலையில் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக கீழே செல்ல தொடங்கியது. 88 அடி ஆழத்திற்கு குழந்தை சென்றதையடுத்து குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு ஆழ்துளை கிணறு தோண்டும் பணி தொடங்கப்பட்டது.

அதன் மூலம் குழந்தையை மீட்கும் முயற்சிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டன. எனினும் பாறைகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் ஆழ்துளை கிணறு தோண்டும் பணி தாமதமாகிக் கொண்டே சென்றது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் குழந்தை விழுந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து குழந்தை உயிர் இழந்து விட்டதை உணர்ந்து அது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

 

நீண்ட உயர்மட்ட ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். 88 அடி ஆழத்தில் இருந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் கயிறு கட்டி மேலே எடுக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவடைந்ததை அடுத்து குழந்தையின் உடல் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மருத்துவமனையிலிருந்து நடுக்காட்டுபட்டி அருகே பாத்திமா புதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு சுர்ஜித்தின் உடல் கொண்டு செல்லப்பட்டு அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் சுர்ஜித்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

இதையடுத்து கல்லறை தோட்டத்தில் குழி தோண்டப்பட்டு அங்கு குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே குழந்தை சுர்ஜித் விழுந்த ஆழ்துளை கிணறும் அதனருகே மீட்புக்காக தோண்டப்பட்ட கிணறும் உடனடியாக மூடப்பட்டன. கான்கிரீட் கலவையை நிரப்பி இவை இரண்டும் பாதுகாப்பான முறையில் மூடப்பட்டன.

Leave a Reply

Right Menu Icon