அமைச்சர் சாமிநாதனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அமைச்சர் சக்கரபாணி!
அமைச்சர் சாமிநாதனுக்கு ஆதரவாக அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.
காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க வேட்பாளரான அமைச்சர் சாமிநாதனை ஆதரித்து, உணவுத்துறை அமைச்சர் அர. சக்கரபாணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சென்னிமலை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சில்லாங்காட்டுவலசு, எல்லைகுமாரபாளையம், பாலக்காட்டுபுதூர், சக்தி நகர் மற்றும் இராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மண்டல பொறுப்பாளரான அமைச்சர் சக்கரபாணி தலைமையில் அமைச்சர்கள் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினர்.
அப்போது திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர்கள், அரசின் சாதனைகளை விளக்கி, மீண்டும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, குண்டடம் கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராக்காடு, சுள்ளபெருக்கிபாளையம், நிழலி, எல்லப்பாளையம்புதூர், எல்லப்பாளையம், பள்ளிபாளையம், கொடுவாய்மேடு மற்றும் பங்காம்பாளையம் ஆகிய
ஊர்களில் பிரசாரம் களைகட்டியது. செட்டிபாளையம், என். காஞ்சிபுரம், வஞ்சிபாளையம், இந்திராநகர் குடியிருப்பு மற்றும் கவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் அமைச்சர் சாமிநாதன் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.
வழிநெடுகிலும் அவருக்குக் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சரின் வருகையை முன்னிட்டு கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் ஆங்காங்கே ஆரத்தி எடுத்து வரவேற்றதுடன், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் வழங்கினர்.
மண்டல பொறுப்பாளருடன் இணைந்து அமைச்சர்கள் மேற்கொண்ட இந்த அதிரடிப் பிரசாரம், காங்கேயம் தொகுதியின் தேர்தல் களத்தில் தி.மு.க தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்களின் இந்த சூறாவளிப் பயணத்தால் தொகுதி முழுவதும் இப்போதே தேர்தல் ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது.





