சி.பி.ஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல்..!
நமோ செயலி மூலம் நடைபெற்ற ஆன்லைன் ஊழல் தொடர்பாக பா.ஜ.க மற்றும் அதன் முன்னாள் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை நடத்தக் கோரி, சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்தச் செயலி மூலம் இதுவரை வசூலிக்கப்பட்ட நிதி குறித்த முழுமையான கணக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மனுதாரர் பி.ஆர். அரவிந்தக்ஷன் மனுவில் கூறியுள்ளதாவது, ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் அல்லது கிசான் சேவா போன்ற திட்டங்களுக்காக நன்கொடை வழங்கியவர்களுக்கு, தங்களது பங்களிப்பு அந்தத் திட்டங்களுக்கான அரசு கணக்கிற்குச் சென்றடைந்ததா என்பது குறித்து வெளிப்படையான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இந்த நன்கொடைகள் வெறும் கட்சி நிதியாகவே கையாளப்பட்டன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், 2021 டிசம்பர் 25 அன்று, அப்போதைய பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா ‘நமோ’ செயலி மூலம் பா.ஜ.க-வின் சிறப்பு சிறுநன்கொடை இயக்கத்தை அறிவித்தார் என்றும் இந்தியாவிற்கு முதலிடம் கொடுக்கும் கட்சியை வலுப்படுத்தும் சிறு நன்கொடைகளை வழங்குமாறு பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார் என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து, பிரதமர் மற்றும் பா.ஜ.க தலைவரின் வேண்டுகோளை ஏற்று, நான் உட்பட குடிமக்கள் பலரும் இந்த செயலியின் மூலம் நன்கொடை வழங்கத் தூண்டப்பட்டோம். நாங்கள் வழங்கும் பங்களிப்புகள் பா.ஜ.க-வுக்கும், அதே சமயம் ஸ்வச் பாரத், பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் மற்றும் கிசான் சேவா போன்ற மத்திய அரசுத் திட்டங்களுக்கும் சென்றடையும் என்ற தெளிவான எண்ணத்தில்தான் நன்கொடைகளை வழங்கினோம்.
மத்திய அரசின் நலத்திட்டங்களை ஆதரிக்கிறோம் என்ற நம்பிக்கையுடன், நல்லெண்ணத்தின் அடிப்படையில் நன்கொடை வழங்கிய இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் இது ஒரு பெரிய அளவிலான தவறான சித்தரிப்பின் அறிகுறியாகும். இது பிரதமரின் நேர்மை மற்றும் கண்ணியம் தொடர்பான விஷயமாகும். ’நாமா’ செயலியின் முதன்மை புகார் அதிகாரி அமித் மாளவியா மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி சுஸ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.





