--- --:--:-- --
2

தொகுதி மறுவரையறை மசோதா குறித்த சந்தேகங்களுக்கு மக்களவையில் பதிலளித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற தவறான கருத்துகள் பரப்பப்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். கடந்த ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா போன்றே தற்போதைய மசோதாவும் உள்ளதாகவும், இதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அமித் ஷா உறுதிபடக் கூறினார்.

மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது தென் மாநிலங்களை ஓரங்கட்டும் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அவர், தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு அதிக மக்களவை இடங்கள் கிடைக்கும் என்றும் எந்தவொரு தென் மாநிலத்துக்கும் எந்த இழப்பும் ஏற்படாது என்றும் தரவுகளுடன் விளக்கினார். தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களில் உள்ள மொத்த மக்களவை இடங்களின் எண்ணிக்கை தற்போதைய 129 இடங்களிலிருந்து 195-ஆக உயரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

தமிழ்நாட்டில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும் என்றும் அமித் ஷா கூறினார். கேரளாவில் 20 தொகுதிகளில் இருந்து 30 தொகுதிகளாகவும், ஆந்திராவில் 25 தொகுதிகளில் இருந்து 38 தொகுதிகளாகவும், தெலங்கானாவில் 17 தொகுதிகளில் இருந்து 26 தொகுதிகளாகவும், கர்நாடகாவில் 28 தொகுதிகளில் இருந்து 42 தொகுதிகளாகவும் அதிகரிக்கும் என்றும் அமித் ஷா தெளிவுபடுத்தினார்.

 

தொகுதி மறுவரையறை ஆணைய சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று கூறிய அமித் ஷா, தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கை, நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்று திட்டவட்டமாகக் கூறினார். எனவே, 2029-ஆம் ஆண்டுக்கு முன்னர் அது செயல்படுத்தப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை என்றும் அது வரை நடைபெறும் தேர்தல்கள் தற்போதுள்ள தேர்தல் முறை மற்றும் தொகுதிகளின் கீழே நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

 

அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை. மக்களவையில் இந்த மசோதா நிறைவேற 360 வாக்குகள் தேவைப்படும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, ஆளும் பாஜக கூட்டணியிடம் 293 இடங்கள் மட்டுமே உள்ளன. இதேபோன்று மாநிலங்களவையிலும் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மைக்கு 21 இடங்கள் குறைவு என்பதால், இம்மசோதாவை நிறைவேற்றுவது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon