மாதவிடாயை காரணமாக சொல்லி மாணவியை வாசலில் தேர்வு எழுத வைத்த தனியார் பள்ளி!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளியில் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாக புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே தனியார் பள்ளியில் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல், வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டை பாளையத்தில் சுவாமி சிப்பவானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த ஐந்தாம் தேதி பூப்பெய்தி உள்ளார். எனினும் தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறுவதால் தேர்வு எழுதுவதற்காக வகுப்பறைக்கு வந்துள்ளார்.
ஆனால் சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காத பள்ளி நிர்வாகம் சிறுமியை வகுப்பறை வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல், பள்ளி வகுப்பறைக்குள் சிறுமியை அனுமதிக்காமல் வாசலில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த தனியார் பள்ளி நிர்வாகத்தின் நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.





