சபரிமலை மண்டல கால பூஜை தரிசனம் : இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது!!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 48 நாட்களுக்கும், வார நாட்களில் தினசரி 1000 பேருக்கும், சனி, ஞாயிறுகளில் 2000 பேருக்கும் மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோவிலிலும் 6 மாதங்களுக்கு மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சபரிமலையில் புரட்டாசி, ஐப்பசி மாதப்பிறப்புக்கு நடை திறந்த போது குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் மண்டல பூஜைக்காக கோவில் நடை கார்த்திகை 1-ந்தேதி திறக்கப்படுகிறது. இதனால், 48 நாட்களுக்கும் கூடுதல் எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்கூட்டியே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மண்டல பூஜை காலத்தில் ஐயப்பனை தரிசிக்க, ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தனி நபராகவோ, குழுவாகவோ முன்பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. மண்டல பூஜை காலத்தில் வார நாட்களில் தினசரி 1000 பக்தர்களுக்கும், சனி மற்றும் ஞாயிறுகளில் தலா 2000 பேருக்கும் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு தொடங்கிய முதல் நாளான இன்றே பக்தர்கள் போட்டி போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.






