போதைப் பொருட்கள் கடத்தல் விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக இயக்குநர் அமீருக்கு சம்மன்!
போதைப் பொருட்கள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜராக டெல்லி போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த மூன்றாண்டுகளில் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக திமுக அயலக அணி முன்னாள் நிர்வாகியும், தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை டெல்லி போலீசார் கடந்த 9 ஆம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து மத்திய போதைப் பொருட்கள் தடுப்புப் பிரிவு போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீர் நேரில் ஆஜராக டெல்லி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
டெல்லி ஆர்.கே.புரத்தில் உள்ள தேசிய போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவு தலைமையகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் தயாரித்த படத்தை அமீர் இயக்கியிருந்தார்.
அத்துடன் அவர்கள் இருவரும் பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி வந்த நிலையில், அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





