ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கண்டனம்..!
சென்னை பனையூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பிரமாண்ட மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில், த.வெ.க மாநில நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுக்கு அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் மிகக் கடுமையான ஆவேசப் பதிலடியும், இறுதி எச்சரிக்கையும் கொடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, ஆதவ் அர்ஜுனா கொள்கை ரீதியாக வளர்ந்த அரசியல் தலைவர் கிடையாது; நெல் மேல் குருவி போல எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கெல்லாம் பதவி சுகத்திற்காக ஓடித் திரியும் ஒரு சந்தர்ப்பவாதி என்று கடுமையாகச் சாடினார். அவரது அரசியல் பயணத்தைக் குறிப்பிட்ட அவர், ஆதவ் அர்ஜுனா முதலில் தி.மு.க.விற்கு ஓடினார்; அங்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு போனார்.
அங்கேயும் பலன் இல்லை என்பதால் அ.தி.மு.க.விற்கும் வந்தார், ஆனால், நாங்களும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இறுதியாக தேர்தல் நேரத்தில் த.வெ.க.விற்குச் சென்று, வாய்ப்பு பெற்று இப்போது அமைச்சராகியுள்ளார் என்றார். அ.தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய ஆதவ் அர்ஜுனா, மாற்று கட்சி என்று சொல்லாதீர்கள், த.வெ.க.தான் தாய் கட்சி எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்த கே.பி. முனுசாமி, லட்சக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த அ.தி.மு.க.விற்கு த.வெ.க எப்படி தாய் கட்சியாக இருக்க முடியும்? ஆதவ் அர்ஜுனா தான் தோன்றித்தனமாகப் பேசுகிறார் எனக் கண்டித்தார். மேலும், அ.தி.மு.க. தொண்டர்கள் வாக்களித்துதான் த.வெ.க தேர்தலில் வெற்றிபெற்றது என்று ஆதவ் அர்ஜுனா கூறுவது, எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் கட்சி விசுவாசத்தோடு உழைக்கும் உன்னத அ.தி.மு.க. தொண்டர்களை வெட்கமில்லாமல் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் அவர் சாடினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேப்பரில் மட்டும்தான் அவர் பொதுச்செயலாளர் என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்ததற்கு கே.பி. முனுசாமி ‘நாவடக்கம் வேண்டும்’ என எச்சரித்துள்ளார். உன்னைப் போல பல கட்சிகளுக்குச் சென்று பதவி சுகம் அனுபவித்தவர் அல்ல எங்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
1972-ல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கட்சியைத் தொடங்கியபோது சிலுவம்பாளையம் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயத் தொண்டனாக இணைந்து, கிளைக் கழகச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ, எம்.பி, அமைச்சர் என 54 ஆண்டுகாலம் ஒரே இயக்கத்தில் படிப்படியாக உயர்ந்து, தொண்டர்களால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உன்னதத் தலைவர் அவர். அவரைப் பற்றிப் பேச எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
மற்ற கட்சித் தலைவர்களையோ அல்லது தொண்டர்களின் தியாகத்தையோ உதாசீனப்படுத்தி, தரம் தாழ்ந்து பேசுவதை ஆதவ் அர்ஜுனா இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கே.பி.முனுசாமி அறிவுறுத்தினார். அரசியலில் ஒரு பண்பும் தர்மமும் இருக்க வேண்டும். இதை மீறித் தொடர்ந்து பேசினால், நேரடியாக உனது முன்பாகவே வந்து போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்று கே.பி. முனுசாமி தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். த.வெ.க மற்றும் அ.தி.மு.க இடையே தற்பொழுது வெடித்துள்ள இந்த நேரடி வார்த்தைப் போர் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





