இன்று இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!
கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடலோர கர்நாடகா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.
அதேபோல, கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விருதுநகர், மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
அதே போல, தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதாகத் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் கடலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாகவும், வேலூர் மற்றும் பரங்கிப்பேட்டையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. நாகை, தஞ்சை ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், மதுரை நகரம், திருத்தணி , மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும் வாட்டியது.





