--- --:--:-- --

ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்துதான் கிளம்ப வேண்டுமா?

5

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆம்னி பேருந்துகள் சென்னை நகருக்குள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

 

கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதியன்று மாநில போக்குவரத்துத் துறை ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, தென்மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்றும், அவை சென்னை நகருக்குள் நுழையக்கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

 

இக்கட்டுப்பாட்டை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து இன்று இறுதித் தீர்ப்பளித்தார்.

 

 

தமிழ்நாடு மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி, ஒரு பேருந்து முனையம் அமைப்பதற்கான ஒப்புதலைக் கோரி சென்னை பெருநகர வளர்ச்சி முகமை மாநில போக்குவரத்து ஆணையத்திற்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. அதற்கான விண்ணப்பத்தைச் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பான காட்டாங்குளத்தூர் பஞ்சாயத்து யூனியன்தான் தாக்கல் செய்ய வேண்டும். தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு ஒரு குறிப்பிட்ட வழித் தடத்தில் சென்று பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கான உரிமம் ஏற்கனவே சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

 

 

அவ்வாறு இருக்கும்போது, அவற்றின் இயக்கத்தை இப்படி திடீரெனக் கட்டுப்படுத்தவோ? சென்னைக்குள் நுழையத் தடை விதிக்கவோ போக்குவரத்து ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. ஏற்கனவே நீதிமன்றம் அளித்திருந்த இடைக்கால உத்தரவின்படி போரூர் மற்றும் சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகள் ஏறி, இறங்க அனுமதிக்கப்பட்டிருந்தது.

 

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஜனவரி மாதம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இடையேயான பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு மற்றும் மாதவரம் ரவுண்டானா ஆகிய இடங்களைப் பயணிகள் ஏறி, இறங்குவதற்குப் பயன்படுத்தலாம் என்ற நடைமுறையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும், பேருந்துகளைப் பொது இடங்களில் கண்டபடி நிறுத்தாமல் உரிமையாளர்களின் சொந்த இடங்களில்தான் நிறுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மாநில போக்குவரத்து ஆணையத்தின் கிளாம்பாக்கம் சார்ந்த கட்டுப்பாட்டு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் தென்மாவட்டப் பயணிகள் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon