--- --:--:-- --

தனி இயக்கம் தொடங்கிய அண்ணாமலை கடிதம்..!

4

மிழக பா.ஜ.க பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகி, புதிய கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தொடங்கியுள்ள புதிய மக்கள் இயக்கத்தில், குறுகிய காலத்தில் சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

பாஜக மாநிலத் தலைவராக இருந்த காலம் தொட்டு, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலைக்கு மத்திய அரசு சார்பில் துப்பாக்கி ஏந்திய ‘Z+’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. தற்போது அவர் பா.ஜ.கவில் இருந்து முழுமையாக விலகிவிட்ட சூழலில், தனக்கு இந்த உயர் அடுக்கு பாதுகாப்பு தேவையில்லை என முடிவு செய்துள்ளார். இதற்கென இன்று (ஜூன் 6) காலை உள்துறை அமைச்சகத்திற்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், தனக்கான ‘Z+’ பிரிவு பாதுகாப்பை உடனடியாக விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

 

தற்போதைய நடைமுறைப்படி, அண்ணாமலை பாதுகாப்பிற்காகச் சுமார் 36-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அண்ணாமலையின் கடிதத்திற்கு உள்துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ள நிலையில், அவருக்கான இந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மத்திய அரசின் பாதுகாப்பு ஒருபுறம் திரும்பப் பெறப்பட்டாலும், தமிழக மாநில காவல் துறை சார்பில் அண்ணாமலைக்கு வழங்கப்பட்டு வரும் ‘பைலட் எஸ்கார்ட்’ வாகனப் பாதுகாப்பு, உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு தற்போதைக்குத் தொடர்ந்து நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கவுள்ள நிலையில், மத்திய அரசின் பாதுகாப்பை அவர் வேண்டாம் என மறுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon