--- --:--:-- --

சூலூர் சிறுமி கொலை வழக்கு: போலீஸ் காவல் முடிந்து குற்றவாளிகள் ஆஜர்..!

7

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், 3 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, குற்றவாளிகள் இருவரையும் போலீசார் பலத்த துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் கோவை போக்சோ நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அவர்களை ஜூன் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

 

கோவை சூலூர் கண்ணம்பாளையத்தில் கடந்த மே 21-ஆம் தேதி 10 வயது பிஞ்சுச் சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தில் தொடர்புடைய நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்தி (A1) மற்றும் அவனது கூட்டாளி மோகன்ராஜ் ஆகிய இருவரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் கூடுதல் சாட்சியங்கள் மற்றும் முக்கியத் தடயங்களைச் சேகரிப்பதற்காகக் கடந்த ஜூன் 3-ஆம் தேதி குற்றவாளிகள் இருவரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோவை போக்சோ நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.

 

 

தொடர்ந்து, கோவை மாவட்ட தனிப்படை போலீஸார் கடந்த 3 நாட்களாக குற்றவாளிகள் இருவரிடமும் விடியவிடிய விசாரணை நடத்தினர். இதன் ஒருபகுதியாக, ஜூன் 4 அன்று சம்பவம் நடந்த கண்ணம்பாளையம் குளக்கரைக்கு முதன்மைக் குற்றவாளி கார்த்தியைப் போலீஸார் நேரில் அழைத்துச் சென்றனர். கொலை எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்பது குறித்து அவனைக் செய்து காண்பிக்கச் சொல்லி, வழக்கிற்குத் தேவையான மிக முக்கியத் தடயங்களைப் பதிவு செய்து கொண்டனர். நீதிமன்றம் விதித்திருந்த 3 நாட்கள் போலீஸ் காவல் கெடு இன்றுடன் (ஜூன் 6) நிறைவடைந்தது. இதையடுத்து, இருவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்ட பின், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

ஏற்கனவே முதன்மைக் குற்றவாளி கார்த்தி சிறைக்குள் சக கைதிகளால் தாக்கப்பட்டிருந்ததாலும், நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பெருமளவில் திரண்டதாலும் பலத்த பதற்றம் நிலவியது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, நூற்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸார் நீதிமன்ற நுழைவு வாயில் முதல் நீதிமன்ற அறை வரை பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியிருந்தனர்.

 

 

போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரிடமும் கோவை போக்சோ நீதிமன்ற நீதிபதி பகவதி அம்மாள் தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் இருவரையும் வரும் ஜூன் 12-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தரும் நோக்கில், போலீஸாரின் குற்றப்பத்திரிகை (Charge Sheet) தயாரிக்கும் பணி தற்பொழுது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon