வளைகுடா நாடுகளிலும் கொரோனா ஆட்டம் ஆரம்பம் : சவுதி அரேபியாவில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு!!
எண்ணெய் வளம் மிகுந்த வளைகுடா நாடுகளிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில், சவூதி அரேபியாவில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு மன்னர் சல்மான் பிறப்பித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை துவம்சம் செய்து மனித உயிர்களை ஆயிரக்கணக்கில் கபளீகரம் செய்து வரும் கொரோனா வைரஸ், இப்போது இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை பதம் பார்த்து உயிர்களை வதம் செய்யத் தொடங்கியுள்ளது. இதில் மேற்காசியாவில் உள்ள எண்ணெய் வளம் மிக்க ஈரான் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே பரவிய கொரோனா தொற்றால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக , பிற வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகளிலும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சவூதி அரேபியாவில் கடந்த 4 நாட்களில் மட்டும் 300 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில் சவூதி அரசர் குடும்பத்தில் மட்டும் இளவரசர் உட்பட 150 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அந்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்த நிலையில் உயிரிழப்பும் 52 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சவூதி அரேபியாவில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை காலவரையறையின்றி நீட்டிக்கப்படுவதாக மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் குவைத் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்களை அனுப்பி வைக்குமாறு இந்தியாவிடம் அந்நாட்டு அரசு உதவி கேட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 15 மருத்துவர்கள் அடங்கிய குழுவை ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.






