பெற்றோர்கள் வழி தவறினால் அடுத்த தலைமுறையை காப்பாற்றவே முடியாது. திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ம.ந. இளங்கோ பேச்சு..!
திருப்பூர்,திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 76 ஆவது குடியரசு தின விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.இடைநிலை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ம.ந. இளங்கோ 76 வது குடியரசு தின தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளியின் என்.சி.சி., ஜே.ஆர். சி , சாரண, சாரணியர் மற்றும் சாரணிய குழந்தைகளுக்கான 3, 4, 5 ம் வகுப்பு படிக்கும் கப், புல் புல் மாணவர் மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: தற்போது குழந்தைகள் எந்த நிலைக்கு செல்வார்கள் என்று பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.இதனை ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இப்போது இருக்கும் சட்டத்தினால் ஆசிரியர்கள் இதனை மீற முடிவதில்லை. நானும் நகராட்சி பள்ளியில் படித்தவன் தான். இப்பொழுது ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுது இன்று எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று சாமியை கும்பிட்டு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.
செய்திகளை அந்த காலத்தில் பத்திரிகைகளிலும், டிவியிலும் பார்க்க வேண்டிய இருந்தது. ஆனால் இப்பொழுது கையடக்க செல்போனில் பார்க்கும் நிலை வந்துவிட்டது. இப்பொழுது நடந்து விழாவை இந்த நிமிடத்தில் உலகம் முழுவதும் பார்க்கலாம். அந்த அளவிற்கு அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளது. அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்ததோ அதைவிட குற்ற சம்பவங்கள் இருமடங்கு கீழே சென்றுள்ளது.
இன்று நமது வாழ்க்கையில் செல்போன் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.அந்த சிறிய செல்போன் நம்மை எல்லாம் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இப்பொழுது உள்ள பெற்றோர்கள் சாப்பிடவில்லை என்றால் செல்போன் பார்க்க கொடுக்கிறார்கள். மற்றவர்களோடு பேசும் பொழுது தொந்தரவு செய்யாமல் இருக்க செல்போன் கொடுக்கிறார்கள்.
இது தவறான முன் உதாரணமாகும். இப்பள்ளியில் மாணவர்களின் அணிவகுப்பை பார்க்கும் பொழுது பள்ளியில் 4 இல் ஒரு பங்கு மாணவர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு உள்ளார்கள். இவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். சாரண சாரணிய குழந்தைகள் 15 நாட்களில் பயிற்சி பெற்று அணிவகுப்பில் பங்கேற்றுள்ளது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும். ஒரு சிறிய தூண்டுகோல் தான் ஒரு பெரிய வளர்ச்சியாக மாறினிருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது.
தற்போது நாட்டின் நிலைமை மது என்று இருந்தது இப்பொழுது கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகமாக புலங்கக் கூடிய நிலை வந்துவிட்டது. இது எங்கு போய் முடியும் என்று தெரியாது. ஆனால், குழந்தைகள் நினைத்தால் வருங்கால சந்ததியை காப்பாற்ற முடியும். குழந்தைகள் கூறினால் கண்டிப்பாக அவர்களது பெற்றோர்கள் கேட்பார்கள். குழந்தைகள் நினைத்தால் உலகத்தை மாற்ற முடியும். பெற்றோர்கள் வழி தவறினால் அடுத்த தலைமுறையை காப்பாற்றவே முடியாது.
பெற்றோர்கள் சரியாக வளர்த்தாத குழந்தைகள் தான் சமூக சீர் கேடாக மாறுகிறது. ஆயிரம் பேர் படிப்பு பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் பொழுது 50 மாணவர்கள் தான் கலந்து கொள்கிறார்கள். இதில் இருந்து என்ன தெரியுது என்றால் மீதம் இருக்கும் 950 மாணவர்களும் தோல்வி பயத்தினால் கலந்து கொள்ளாத நிலை தான் உள்ளது.
தோல்வி அடையும் பொழுது இந்த உலகம் நம்மை ஏளனமாக தான் பார்க்கும் என்று பயப்படுகிறார்கள். வெற்றி அடைந்தால் நீங்கள் சொல்வதெல்லாம் தத்துவங்கள். அதேசமயம் தோல்வி அடைந்தால் நீங்கள் என்ன கூறினாலும் அது எடுபடாது. ஆகவே உங்கள் வெற்றி படிப்பில் தான் உள்ளது. பெற்றோர்கள் வீட்டில் தாங்கள் நடந்து கொள்ளும் முறையை தான் குழந்தைகள் வெளியே செய்கிறார்கள்.
இந்த நிலைக்கு காரணம் பெற்றோர்கள் தான். ஐந்து வயது வரை குழந்தைகளை பெற்றோர்கள் அதிகமாக தாங்குகிறார்கள். ஆனால், எட்டாம் வகுப்பு வரும் பொழுது சரியாக கண்டுகொள்வதில்லை. இதனால் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு தெரிவதில்ல்லை. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறோம். நாங்கள் குழந்தையை நன்றாகத்தான் வருகிறோம் என்கிறார்கள்.
ஆனால் அவர்களையும் மீறி குழந்தைகளின் மாற்றங்களை அறியாதபோது வீட்டில், வெளியில் குழந்தைகளின் நிலை மாறி விடுகிறது. எனவே குழந்தைகளை நாம் எப்பொழுதும் கண்காணிப்பிலே வைத்து இருந்தால் குழந்தைகள் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியை அடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து 4 ம் வகுப்பு மாணவிகள் லக்ஷனா, பூவீதா ஆகியோரின் குடியரசு தினம் குறித்து பேசினார்கள். முடிவில் பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார். விழாவில் நகராட்சி தலைவர் குமார், துணைத்தலைவர் வளர்மதி உள்பட பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சிக்குழு மற்றும் முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர்.