விஜய் உள்பட 5 மாநில முதல்வர்களுக்கு ஸ்பெஷல் அப்பாயின்மெண்ட்
டெல்லியில் நேற்று (ஜூன் 11) நடைபெற்ற நிதி ஆயோக் (NITI Aayog) நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்புகளில், அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சி முன்னுரிமைகள், நிர்வாக விவகாரங்கள் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
முன்னதாக நேற்று (ஜூன் 12) காலையில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் 11-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநில முதல்வர்கள் டெல்லிக்கு வந்திருந்தனர். இதில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மூடியை சந்தித்தார், என்று பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது. இந்த சந்திப்பில், உத்தரப் பிரதேசம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமருடன் விவாதித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் பிரதமரைச் சந்தித்துப் பேசினார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, விஜய் பிரதமரைச் சந்திப்பது இது 2-வது முறையாகும். நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், விஜய் பிரதமரைச் சந்தித்ததாகத் தமிழக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அடுத்து கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் பிரதமரைச் சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சி முன்னுரிமைகள் குறித்து “ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை” மேற்கொண்டார். ஜூன் 3-ஆம் தேதி கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, சிவகுமார் பிரதமரைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்,” என்று பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த சந்திப்பில், கட்டமைப்பு வசதிகள், முதலீடுகள், நகர்ப்புற போக்குவரத்து, நீர்ப்பாசனம், புத்தாக்கம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் நலத்திட்டங்கள் உள்ளிட்ட கர்நாடகாவின் வளர்ச்சி முன்னுரிமைகள் குறித்து பிரதமருடன் ஆக்கப்பூர்வமாக விவாதித்ததாக சிவகுமார் தெரிவித்தார்.
கர்நாடக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக இன்று புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தேன். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் கர்நாடகா எப்போதும் முக்கியப் பங்களிப்பை வழங்கி வருகிறது, அந்தப் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதில் மாநில அரசு உறுதியுடன் இருப்பதை மீண்டும் வலியுறுத்தியதாக டி.கே.சிவக்குமார் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும், கூடுதல் வாய்ப்புகளை ஈர்க்கவும், கர்நாடக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்திய அரசுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற எதிர்நோக்கியுள்ளேன். நாம் இணைந்து வலுவான கர்நாடகாவை உருவாக்கி, அதன் மூலம் வலுவான இந்தியாவிற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் பிரதமரைச் சந்தித்துப் பேசினார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. அடுத்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்குவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பிரதமருடன் விவாதித்தார்.இந்தச் சந்திப்பிற்குப் பிறகு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட உமர் அப்துல்லா, பிரதமர் தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவியில் நிறைவு செய்துள்ளதற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது, பொருளாதார நிலை, வளர்ச்சியின் வேகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை சந்தித்தேன். மேலும், தொடர்ந்து 12 ஆண்டுகள் தடையின்றிப் பிரதமர் பதவியில் நீடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதற்காக அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்,” என்று ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.





