4 எம்எல்ஏகளுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நோட்டீஸ்..!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, அதிமுகவின் 25 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் புகார் மனு கொடுத்தார்.
இதற்கிடையில் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
அதேசமயம், தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த ஏனைய 21 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தனர்.இதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “எம்.எல்.ஏ.க்கள் பதவிகளை ராஜினாமா செய்த 4 உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தொடங்கியது” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அந்த நான்கு பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்.
எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்த மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோருக்கு, ஏன் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என ஏழு நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.





