நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன?
டெல்லியில், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய், நீட் தேர்வு, VB-G RAM-G திட்டம், கல்வி நிதி உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தியுள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பேசியதாவது: “நமது மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. ஏனெனில், இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், கிராமப்புற மாணவர்களும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் (MBBS), பல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலைப் பட்டம் (BDS) மற்றும் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவப் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், ஒன்றிய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத் திட்டத்தின் (கிராமப்புறம்) (VB-G RAM-G) கீழ் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு இவ்வாய்ப்பின் மூலம் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
மாணவர்களின் நலன், கல்விச் சேவைகளின் தொடர்ச்சி மற்றும் கூட்டுறவு கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ‘ஒருங்கிணைந்த கல்வி’ (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3,284 கோடி நிதியை, எவ்வித நிபந்தனைகளுமின்றியும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தவோ அல்லது மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவோ வற்புறுத்தாமலும் விரைவாக விடுவிக்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு தனித்துவமாக விளங்கும் தொன்மையான நூலான திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன்” என பேசினார்.





