வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கைது..!
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் கைது செய்யப்பட்டார். அதிமுக அரசில் கடந்த 2015 ஆம் ஆண்டு செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது போக்குவரத்து துறையின் வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ஒரு லட்சம் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த செப்டம்பரில் செந்தில் பாலாஜி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேசன் ஆகியோரின் வீடு, அலுவலகம் என 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது கணேசனிடம் சுமார் 7 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று முன்தினம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதை போல நேற்று கணேசனிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர்.
அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கணேசனை வருகிற 25-ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.






