--- --:--:-- --

இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சட்ட விரோதமாக ஊடுருவியதாக கிடைத்த ரகசிய தகவல்.!

15

ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து நேற்று இரவு தனுஷ்கோடி கடற்கரைப்பகுதியில் ரோந்து சென்றபோது இலங்கையைச்சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக தமிழகத்தில் ஊடுருவி தனுஷ்கோடி கடற்கரையில் முகுந்தராயர் சத்திரம் நோக்கி நடந்து செல்வதைப்பார்த்து அவரைப்பிடித்து விசாரணை செய்தனர்.

 

அவர் சிங்களத்தில் பேசியுள்ளார். 30 வயதான இலங்கை இளைஞரை தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு கடலோர பாதுகாப்பு பிரிவு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தேக நபர் இலங்கையின் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் பண்டாரநாயக்க (30) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

விசாரணையின் போது, இலங்கை நண்பர் ஒருவர் இராமேஸ்வரத்தில் உள்ள தனது நண்பரை சந்திக்கப் போவதாகவும், அவருக்கு ஒரு சர்க்கரை ஆலையில் அல்லது தமிழ்நாட்டில் வேறு ஏதேனும் ஒரு தொழிற்சாலையில் வேலை கிடைக்கும் என்றும் கூறினார். எனவே அவர் மன்னார் வந்து படகு மூலம் இராமேஸ்வரத்திற்கு வந்ததாகக்கூறினார்.

 

சிங்கள மொழி பேசும் நபர் சில சதி அல்லது உளவு அல்லது சமூக விரோத செயல்கள் அல்லது ஏதோபிற காரணங்களுடன் ஏன் இங்கு வந்தார் என்பது குறித்து மொழிபெயர்ப்பாளர் மூலம் தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு பிரிவு காவல் நிலையத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் இவர் இலங்கையில் போலீசாக பணியாற்றியுள்ளார் என்பதால் மத்திய மாநில உளவுத்துறையினர் தீவிரவிசாரணை செய்து வருகின்றனர்.

 

இதுகுறித்து மத்திய அரசு வழக்கறிஞர் ராமமூர்த்தி கூறுகையில்: நேற்று இரவு தனுஷ்கோடியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு நடந்துவந்த சிங்களர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கைக்கு ஆவணங்கள் ஏதுமின்றி யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை நீடித்து வருகிறது அது போலவே ராமேஸ்வரம் தீவு பகுதிக்கும் இலங்கையிலிருந்து மர்ம படகில் யார் வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையே தற்போது வரை நீடித்து வருகிறது. அதற்கு இன்றைய சிங்களர் ஊடுருவல் தகுந்த உதாரணமாக உள்ளது.

 

 

மன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையே மர்ம படகு சர்வீஸ் நடந்து வரும் நிலையில் இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மேலும் இது போல சமூக விரோதிகள் தீவிரவாதிகள் ஊடுறுவி இருந்தால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க முடியாது.

 

எனவே ராமேஸ்வரம் தீவு பகுதியில் கடலோர பகுதியில் ஊடுருவல் நிறைந்த சந்தேகத்திற்கிடமான பகுதிகளான தனுஷ்கோடி முதல் பாம்பன் வரை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவேண்டும், போலீஸ் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் கடற்படை கடலோர காவல்படையின் தீவிர கண்காணிப்பைப்பலப்படுத்த வேண்டும். இது நாட்டின் பாதுகாப்பிற்கு தேவையான ஒன்றாகும். அதை தொடராதபட்சத் தில் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறினார்.

Leave a Reply

Right Menu Icon