சபரிமலையில் மகரஜோதி தரிசனம் : பல லட்சம் ஐயப்ப பக்தர்கள் வழிபாடு!!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்தை பல லட்சம் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு களித்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில், மண்டல , மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த கார்த்திகை 1-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த சீசனில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது.

ஆண்டுதோறும் தை முதல் நாளில் மகரஜோதி வடிவில் பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சி தருவது வழக்கம். இன்று மாலை மகரஜோதி தரிசனம் காண லட்சக் கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மகரஜோதியை முன்னிட்டு பந்தளம் மகாராஜா அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

தொடர்ந்து மாலை அந்தி சாயும் வேளையில் பொன்னம்பல மேட்டில் மலை உச்சியில் ஜோதி வடிவில் காட்சியளித்த ஐயப்பனை லட்சக்கணக்கான பக்தர்கள் பய பக்தியுடன் தரிசித்து பரவசமடைந்தனர்.





