தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்ற வளாகத்திலேயே சிறுமி எடுத்த விபரீத முயற்சி..!
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைக்கு ஆஜராகி இருந்த 15 வயது சிறுமி முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம், உயர் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தம்பதியரின் குடும்பப் பிரச்னை தொடர்பாக ஆட்கொணர்வு வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்த சிறுமி, திடீரென முதல் தளத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அதிர்ஷ்டவசமாக சிறுமி, படுகாயங்களுடன் உயிர் தப்பினார். அவரை மீட்ட ஊழியர்கள், ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவ இடத்தை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரும், தமிழக காவல் துறையினரும் ஆய்வு செய்தனர்.
விசாரணையில், சிறுமியின் தாய் அந்தமானைச் சேர்ந்தவர் என்பதும், தந்தை சென்னை நீலாங்கரையைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.தாய் மறுமணம் செய்து கொண்ட காரணத்தால், சிறுமியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தந்தை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தாய் மறுமணம் செய்து கொண்டதால் சிறுமியை காப்பகத்தில் சேர்க்க உத்தரவிட்டது. இதனால் மனமுடைந்த சிறுமி, உயர் நீதிமன்றத்தின் முதல் தளத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.





