முதல்வர் ஸ்டாலின் பயணித்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு பயணித்த தனியார் பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாக மர்ம ஆசாமி மிரட்டல் விடுத்ததுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு முறை பயணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக முதலமைச்சர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் மொத்தம் 17 நாட்கள் தங்கும் முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். உயர்தர வேலை வாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழக தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்ற விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை விமான நிலைய அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயிலை முதல்வர் செல்லும் எமிரேட்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்ற பிறகுதான் அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது. உடனே இது குறித்து விமான நிலைய போலீஸார் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டலால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றத்துடன் இருந்துள்ளனர். இன்று காலை முதல்வர் சென்ற விமானம் துபாயில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக தகவல் கிடைத்த பிறகுதான் அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். துபாய் சென்றபிறகு எமிரேட்ஸ் விமானத்தில் சோதனை செய்யப்பட்டது. அதன்பின் அமெரிக்கா புறப்பட்டது.மேலும் மிரட்டல் வந்த இமெயில் ஐடியை வைத்து சென்னை விமான நிலைய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் வழக்கமாக வரும் புரளி என்பதை கண்டுபிடித்துள்ள அதிகாரிகள், முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார், அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இமெயில் அனுப்பிய நபரின் ஐபி முகவரியை கண்டுபிடிக்கும் பணியில் தற்போது போலீஸார் இறங்கியுள்ளனர்.எனினும், தமிழ்நாடு முதல்வர் சென்ற தனியார் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டல் இமெயிலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





