--- --:--:-- --

தாய், மனைவியை அடக்கம் செய்த அதே இடத்தில் மகளையும் அடக்கம் செய்யும் இளையராஜா..!

1

சென்னையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்துக்கு உடல் கொண்டுசெல்லப்படும் நிலையில், இன்று நண்பகலில் அடக்கம் செய்யப்படுகிறது.

 

கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி, நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இலங்கையில் இருந்து விமானம் மூலம் உடல், நேற்று மதியம் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

 

அங்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். பவதாரிணி உடலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சரின் சார்பில் தாம் அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார்.

 

பவதாரிணியின் மறைவு வருத்தம் அளிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்த நடிகர் ரஜினி இளையராஜாவை இன்று நேரில் சந்திக்க உள்ளதாக கூறினார். பல்வேறு தரப்பினரின் அஞ்சலிக்குப் பிறகு, பவதாரிணியின் உடல் சென்னையிலிருந்து தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப் பகுதிக்கு நேற்றிரவு 10 மணியளவில் புறப்பட்டது.

 

முல்லைப் பெரியாற்றங்கரையில் உள்ள இளையராஜாவின் பண்ணைவீட்டில் இளையராஜாவின் தாய் சின்னத்தாயி, மனைவி ஜீவா ஆகியோர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பவதாரிணியின் உடல் இன்று நண்பகலில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Right Menu Icon