ஒரு மணி நேரம் ஆலோசனை – விஜய் – ராகுல் சந்திப்பு
மாணவர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்க சென்னை வந்த ராகுல் காந்தி முதலமைச்சர் விஜய் உடன் ஒரு மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து தனியார் நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் விஜய் அளித்த விருந்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். மாணவர்களின் கருத்துகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறியும் வகையில், நாடு முழுவதும் மாணவர்களை ராகுல் காந்தி சந்தித்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று மாலை 5 மணிக்கு சென்னை தீவுத்திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார். அப்போது, கல்வி முறை, தேர்வுகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிகிறார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க டெல்லியில் இருந்து ராகுல் காந்தி சென்னை வந்தார். சென்னை வந்த ராகுல் காந்தி முதலமைச்சர் விஜயின் நீலாங்கரை வீட்டிற்குச் சென்றார். நீலாங்கரை வந்த ராகுல் காந்திக்குத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதைத் தொடர்ந்து நீலாங்கரை வீட்டில் முதலமைச்சர் விஜய் உடன் ராகுல் காந்தி சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து பாலவாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ராகுல் காந்திக்கு முதலமைச்சர் விஜய் விருந்து ஏற்பாடு செய்திருந்தார்.
நீலாங்கரை வீட்டில் இருந்து முதலமைச்சர் விஜய் மற்றும் ராகுல் காந்தி இருவரும் ஒரே காரில் பயணம் செய்து தனியார் நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றனர். இதையடுத்து தனியார் நட்சத்திர ஹோட்டலில் இருவரும் விருந்து முடித்த பின்னர் தனித்தனி கார்களில் புறப்பட்டுச் சென்றனர். முதல்வர் விஜய் உடனான விருந்து முடிந்து ராகுல்காந்தி, மாலை 4 மணிக்கு தீவுத்திடலுக்குச் சென்று மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு, இரவு 8 மணிக்கு டெல்லிக்குப் புறப்படுகிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





