ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடுக!
தாராபுரம் இடைத் தேர்தலை ஒட்டி, தேர்தல் பிரச்சாரம் சூடி பிடித்துள்ளது. இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை தி.மு.க வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். தாராபுரம் உடுமலை சாலையில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “சத்தியத்திற்கு விரோதமாக செயல்பட்ட அந்த வேட்பாளரை, பெட்டிபாமா, பல்டிபாமா என மக்கள் அழைக்கின்றனர். அந்த உருவத்தை வைச்சுக்கிட்டு எப்படி தான் பல்டி அடிச்சாங்கன்னு தெரியல” என்று உருவக் கேலி செய்யும் வகையில் ஸ்டாலின் பேசி இருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது கடும் கண்டங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், தாராபுரம் பரப்புரைக் கூட்டத்தில் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா குறித்து இழிவான மற்றும் உடல் தோற்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும் ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா அளித்துள்ள புகாரில், “02.10.2026 அன்று தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் ஆற்றிய பொதுக்கூட்ட உரை, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அப்பட்டமாக மீறியுள்ளதை தங்களது கனிவான கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். இவ்வுரை நேற்று முதல் பல்வேறு காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் பரவலாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
எங்கள் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் திருமதி பி. சத்தியபாமாவை நேரடியாக இழிவுபடுத்தும் வகையில், “இப்படிப்பட்ட உடலை வைத்துக்கொண்டு எப்படி பல்டி அடிக்க முடிகிறது” என்று கேள்வி எழுப்பியதன் மூலம், அவரது உடல் தோற்றத்தை கேலி செய்யும் மிக மோசமான அவமதிப்பிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இது ஒரு பெண் வேட்பாளரை அவமதிப்பது மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களை அவமதிப்பதாகவும் உள்ளது. மேலும், இது தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 1998-ன் பிரிவு 4-ன் கீழ் குறிப்பாக குற்றமாகும்.
மேற்கண்ட குற்றச்சாட்டுக்குரிய அறிக்கை எந்தவொரு கொள்கை, திட்டம், பொது செயல்பாடு அல்லது வேட்பாளரின் அரசியல் நிலைப்பாடு தொடர்பானதல்ல. அது தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு பெண் வேட்பாளரின் உடல் தோற்றம்/உடலை நேரடியாக விமர்சித்து கேலி செய்கிறது. இத்தகைய தனிப்பட்ட குறிப்பு, அவரது வேட்புமனு அல்லது பொது செயல்பாடு தொடர்பான எந்தவொரு சட்டபூர்வமான பிரச்சினைக்கும் முற்றிலும் தொடர்பற்றதாகும்.
தமிழ்நாட்டில் பெண்கள் பொது வாழ்வில் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பெண்களை உடல் தோற்றத்தின் அடிப்படையில் அவமதிப்பதும், ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் திமுகவின், குறிப்பாக திரு. மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது மகன் திரு. உதயநிதி ஸ்டாலினின் வழக்கமான பழக்கமாகிவிட்டது என்று நான் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் நடத்தை விதிமுறைகள், அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்திற்கு விரோதமான எந்தவொரு மொழியையோ செயலையையோ பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று வெளிப்படையாகக் குறிப்பிடுகிறது.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டமும் தேர்தல் ஆணையம் உடனடியாக ஒரு தற்காலிகப் பிரச்சாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும், அந்தத் தடைக்காலத்தில் குற்றம் புரிந்தவர்கள் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுவதிலிருந்தும், நேர்காணல்கள் வழங்குவதிலிருந்தும் அல்லது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலிருந்தும் தடை செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
எனவே, தமிழ்நாட்டில் பெண்களின் மரியாதை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும், குறிப்பாக எங்கள் வேட்பாளர் திருமதி பி. சத்தியபாமாவின் கண்ணியத்தை குறிவைத்து, அவர் வாக்கு சேகரிப்பதில் இருந்து தடுக்க வேண்டும் என்ற நோக்கில் திரு. ஸ்டாலின் செயல்பட்டுள்ளதாலும், மாண்புமிகு தேர்தல் ஆணையம் திரு. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ள நட்சத்திரப் பிரச்சாரகர் அந்தஸ்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாடு பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 1998-ன் பிரிவு 4-ன் கீழ் அவர் புரிந்த குற்றங்களுக்காக திரு. ஸ்டாலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், எங்கள் வேட்பாளர் திருமதி பி. சத்தியபாமா சுதந்திரமாகவும் அச்சமின்றியும் தேர்தலில் பங்கேற்பதை உறுதி செய்து, நீதியை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அதில் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




