பிணவறைக்குள் ரீல்ஸ் – த.வெ.க தொண்டர் உட்பட 3 பேர் கைது
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை சவக்கிடங்கிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த உடல்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ பதிவிட முயன்ற இருவர் உட்பட 3 பேரை போலிஸார் கைது செய்தனர். வியாசர்பாடியைச் சேர்ந்த சதீஷ்குமார் (25) மற்றும் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த தீனா என்ற தினேஷ்குமார் (30) ஆகியோர், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்த எர்ணாவூரைச் சேர்ந்த ‘பல்லு’ ஆனந்த் என்பவரின் உடலைப் பார்ப்பதற்காக வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.
அங்கு, பேட்டரி வாகன ஓட்டுநரான சங்கர் என்பவருக்கு ரூ.200 லஞ்சமாகக் கொடுத்து, சவக்கிடங்கு ஊழியர் சீனிவாசன் மூலம் சாவியைப் பெற்றுள்ளனர். பின்னர் சவக்கிடங்கிற்குள் நுழைந்த அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த பல உடல்களைத் தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக குடியிருப்பு மருத்துவ அலுவலர் (RMO) வனிதா மலருக்குத் தகவல் தெரிவித்தனர். அவரது புகாரின்பேரில், மருத்துவமனை காவல் நிலையப் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷ்குமார், தினேஷ்குமார் மற்றும் இடைத்தரகராகச் செயல்பட்ட சங்கர் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
விசாரணையில், சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு பிரபலமாவதற்காகவே இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். அரசு சவக்கிடங்கிற்குள் அத்துமீறி நுழைந்தது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார், பின்னர் அவர்களை நிலைய பிணையில் (Station Bail) விடுவித்தனர். மேலும், இந்தச் சம்பவத்திற்குத் துணையாக இருந்த சவக்கிடங்கு ஊழியர் சீனிவாசன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




