டாஸ்மாக் கடைகளில் 4,000 இயந்திரங்கள்..!
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெற்று, வைப்புத் தொகையான ரூ.10-ஐ டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க 4,000 ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளதாகத் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் காலி மதுபாட்டில்களைச் சேகரிக்கும் திட்டத்தில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 4,000 ரிவர்ஸ் வெண்டிங் இயந்திரங்களை (Reverse Vending Machines) நிறுவும் புதிய திட்டத்தைத் தமிழக அரசு தொடங்க உள்ளது. ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளைத் தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பாட்டில் வைப்புத் தொகையை உடனடியாகத் திரும்ப வழங்கும் இந்த புதிய நடைமுறை குறித்துச் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
காலி மதுபாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் என். சதீஷ் குமார் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வெள்ளிக்கிழமை (11.09.2026) விசாரணைக்கு வந்தன. அப்போது டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கே. நந்தகுமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதங்களை முன்வைத்தார்.
தற்போது நடைமுறையிலுள்ள பாட்டில் சேகரிப்பு முறை காரணமாக டாஸ்மாக் ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதோடு, பணத்தைத் திரும்ப வழங்குவதில் தாமதம், சில்லறை தட்டுப்பாடு மற்றும் சில நேரங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படுகின்றன என்று அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்தப் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், ஊழியர்களின் சுமையைக் குறைக்கவும் தொழில்நுட்ப அடிப்படையிலான புதிய முறை முன்மொழியப்பட்டுள்ளது.
இப்புதிய திட்டத்தின் கீழ், டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளின் அருகே இந்த நவீன இயந்திரங்கள் முதற்கட்டமாக நிறுவப்படும். பொதுமக்கள் காலி பாட்டில்களை இந்த இயந்திரத்தில் செலுத்தி சரிபார்த்தவுடன், அதற்கான ஊக்குவிப்புத் தொகை எலக்ட்ரானிக் முறையில் அவர்களின் கணக்கிற்கு நேரடியாகத் திரும்பச் செலுத்தப்படும். இதன் மூலம் ரொக்கப் பணப் பரிவர்த்தனைகள் முற்றிலும் தவிர்க்கப்படும். முதற்கட்டமாக ஒரு கடைக்கு ஒரு இயந்திரம் வீதம் 4,000 இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.
இந்த இயந்திரங்களை நிறுவி இயக்குவதற்காகச் கணினி அமைப்பாளரைத் தேர்ந்தெடுக்க டாஸ்மாக் நிறுவனம் ஏற்கனவே டெண்டர் கோரியுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம், எவ்விதக் கட்டணமும் இன்றி இந்த இயந்திரங்களை நிறுவி, சேகரிப்பு மையங்களுக்கான வாடகையையும் செலுத்த வேண்டும். சேகரிக்கப்படும் காலி பாட்டில்களே அந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாபமாக இருக்கும்.
பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 வீதம் திரும்பப் ஒப்படைப்பவருக்கு அந்த நிறுவனம் வழங்கும்; அந்தத் தொகையை அரசு அந்நிறுவனத்திற்குத் திரும்ப அளிக்கும். மேலும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதி வரி என்ற பெயரில் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வசூலிக்கும் சட்ட மசோதா சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதையும் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் நினைவுகூர்ந்தார்.
கடந்த 2026 ஜூலை 31 வரை, திரும்பப் பெறப்படாத வைப்புத் தொகை ரூ.51.82 கோடியாகவும், கடைகளில் சேகரிக்கப்பட்ட காலி பாட்டில்கள் விற்பனை மூலம் கிடைத்த தொகை ரூ.148.40 கோடியாகவும் திரண்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய மறு கொள்முதல் திட்டத்தைச் செயல்படுத்த டாஸ்மாக் நிறுவனத்திற்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் அளித்த நீதிபதிகள், அதுவரை தற்போதைய பாட்டில் சேகரிப்பு முறையையே தொடர்ந்து செயல்படுத்த உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




