2026-ல் தங்க விலை எப்படி இருக்கும்?
2025-ஆம் ஆண்டு தங்கத்தின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடியாக உயர்ந்து பல புதிய உச்சங்களைத் தொட்டது. 2025-ஆம் ஆண்டில் தங்கம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 74 சதவிகிதம் முதல் 78 சதவிகிதம் வரை வருமானத்தை வழங்கியுள்ளது.
இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய வளர்ச்சி. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில், ஒரு சவரன் தங்கத்தின் விலை, சுமார் 56,000 ரூபாய் முதல் 58,000 ரூபாய் வரை இருந்தது. ஜூலை மாதத்தில் இது, 93,000 ரூபாயை எட்டியது. இதுவே அக்டோபரில், 97,000 ரூபாயாக அதிகரித்தது. டிசம்பர் மாதத்தில் ஒரு சவரன் ஒரு லட்சத்தை தாண்டி, புதிய உச்சத்தை எட்டியது. தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர். இதனால் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வர்த்தகக் கட்டுப்பாடுகள் பணவீக்க அச்சத்தை உருவாக்கியதால் உலகளவில் தங்கத்தின் தேவை அதிகரித்தது.
இந்தியா, பிரேசில் உட்பட உலகின் பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் கையிருப்பை அதிகரிக்க டன் கணக்கில் தங்கத்தை வாங்கிக் குவித்ததாலும் தங்கத்தின் விலை உயர்ந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததால், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலை உயர்ந்தது.
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தது தங்கம் மீதான முதலீட்டை அதிகமாக்கியது. விலையுயர்வு காரணமாகக் தங்க நகைகளுக்கான தேவை குறைந்தாலும், Digital Gold மற்றும் Gold ETF போன்றவற்றில் மக்கள் அதிக முதலீடு செய்ததாலும் விலை ஜிவ்வென்று உயர்ந்தது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் பலமுறை உச்சத்தை தொட்டது. ஆண்டு தொடக்கத்தில் ஒரு கிலோ வெள்ளி சுமார் 84,500 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது மார்ச் மாதத்தில், 1,03,900 ரூபாயாக உயர்ந்தது. ஏப்ரலில் 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயாக குறைந்தது. செப்டம்பர் மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை அடைந்தது. அக்டோபர் மாதத்தில் கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்த வெள்ளி விலை, 1 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.
நவம்பர் மாதத்தில் வெள்ளியின் விலை சற்று குறைந்தது. ஆனால் டிசம்பரில் மீண்டும் எகிறி, இரண்டு லட்சத்து, 54 ஆயிரம் என்ற வரலாற்று உயர்வை கண்டது. 2025-ல் உலகம் முழுவதும் சூரிய ஒளி மின்சக்தி மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்பு உச்சத்தை எட்டியது. வெள்ளி மின்சாரத்தை மிகச்சிறப்பாகக் கடத்தும் என்பதால், இந்தத் தொழில்துறைகளில் வெள்ளியின் தேவை பன்மடங்கு உயர்ந்தது. இந்த தேவை அதிகரிப்பு வெள்ளியின் விலையை உச்சத்திற்கு இட்டுச் சென்றது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




