ஆளுநர் கூறியது போன்று பரவும் பொய்யான செய்தி.. நடவடிக்கை எடுக்க கோரி புகார்!
குலதெய்வ வழிபாட்டை தடைசெய்ய வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதுபோன்று பொய்யான செய்தியை பரப்பியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழர்களை சாராயம் குடிப்பவர்களாக மாற்றுவதே குலதெய்வங்கள்தான் என்றும், சாராய சாவுகளுக்கு அடிப்படை காரணமான குலதெய்வ, நாட்டார் தெய்வ மற்றும் கிராமக் கோயில் விழாக்களை தடைசெய்ய வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதாக பொய்யான செய்தி பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான நோக்கத்துடன் இதுபோன்ற செய்திகளை பரப்பி மக்களை தவறாக வழிநடத்துவது கடும் கண்டனத்துக்கு உரியது என்று ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இது மாநிலத்தில் உயர்பதவியில் இருப்பவரின் மதிப்பை குறைப்பதோடு மட்டுமல்லாமல், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி, பொய்யான செய்தியை பரப்பியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




