விரைவில் இன்னும் 15 பேர் வர உள்ளனர் – அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதால் தான் இன்று அமைச்சராக உள்ளேன் என்றும் விரைவில் இன்னும் 15 பேர் வர உள்ளனர் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையினை முழு நேர கடையாக மாற்றி வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய செங்கோட்டையன், இன்று அரசுக்கு 13 லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் உள்ளது. ஒரு நாளைக்கு வட்டி மட்டுமே 347 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும், பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பெண்கள் அத்தனை பேரும் இன்றைக்குப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய முடிகிறது.
அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்தால், அந்தக் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் திட்டம், குழந்தைகளுக்காக ‘பேபி கிட்ஸ்’ (குழந்தை நலப் பெட்டகம்) வழங்குகிறார்கள். ஒரு அரசு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு இதுவே சான்று. அதுமட்டுமல்ல, பெண் குழந்தைகள் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முதலாக நம்முடைய தலைவர் கொண்டு வரவிருக்கிறார். நம்முடைய தாராபுரம் தொகுதி சாதாரணமானது அல்ல. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். ஒரு நேர்த்தியான, தூய்மையான ஆட்சி நடக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோருக்குப் பின் அவரைப் போல ஒருவரைக் காணவில்லை. நல்லவேளை, எடப்பாடி பழனிசாமி என்னை அக்கட்சியில் இருந்து நீக்கினார். அங்கிருந்து வந்ததால்தான், இன்று மக்கள் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது, வருவாய் துறை அமைச்சராக உள்ளேன், இல்லையென்றால் நானும் எதிர் வரிசையில் நின்று தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள்தானே நீக்கினீர்கள் இப்போது எங்கு அமர்ந்திருக்கிறார் பாருங்கள். யானை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான் அதிமுக. மிக விரைவில் 15 பேர் அங்கிருந்து வெளியே வர இருக்கிறார்கள். எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று கூட அவர்கள் கூட்டம் போட்டுப் பேசிக் கொண்டுள்ளனர், என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இன்றைக்குச் சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் நல நிகழ்ச்சிகளை நான் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறேன். மேலும், ஆந்திராவிடம் இருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறக்கக் கோரி, ஆந்திர முதல்வரை நம்முடைய தலைவர் விஜய் அவர்கள் நேரில் சந்திக்க உள்ளார். நிச்சயம் நல்ல செய்தி கிடைக்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், உங்களுக்குச் சேர வேண்டிய உரிமைகள் எதுவாக இருந்தாலும் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஆன்லைனில் விண்ணப்பியுங்கள். ஆன்லைனில் பதிவு செய்து 15 நாட்களுக்குள் உங்களுக்குப் பதில் வரவில்லை என்றால், ‘ஏன் வரவில்லை?’ என்று அந்த அதிகாரியிடமே நாங்கள் கேள்வி கேட்போம். இந்த வேலை முடியுமா, முடியாதா என்ற பதிலை அவர்கள் எழுத்துப்பூர்வமாக அனுப்ப வேண்டும். அதில் உங்களுக்குக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று வந்தால், அதை உடனடியாக என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வாருங்கள். அது உடனடியாகத் தீர்த்து வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




