--- --:--:-- --

சிறப்பு டெட் தேர்வு முடிவுகள்!

images - 2026-10-13T112937.965

தேர்வு வாரியம் வெளியிட்ட தகுதித் தேர்வு முடிவுகளில், இடைநிலை ஆசிரியர்கள் 80.8% பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 38.3% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 

 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள இந்த முடிவுகளின்படி, இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுதியவர்களில் 80.8 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அடுத்த 5 நாட்களுக்குள் தங்களது தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

 

கடந்த ஜூலை 4-ஆம் தேதி நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள்-1 தேர்வை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த 222 மையங்களில் மொத்தம் 59,535 ஆசிரியர்கள் எழுதினர். அதில் 47,628 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல், ஜூலை 5-ஆம் தேதி 613 மையங்களில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வை 1,60,929 பேர் எழுதினர். அதில் 61,153 பேர் (38.3%) தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 2025 செப்டம்பர் 1 முதல் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்காக இந்த சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது. முன்னதாக, ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக விடைக்குறிப்புகள் மீது பெறப்பட்ட ஆட்சேபனைகளை பாடவாரி வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். அதன்பின்னர், பள்ளிக் கல்வித்துறை அறிவித்த தளர்வுகளுடன் கூடிய குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் விடைகள் மதிப்பீடு செய்யப்பட்டு இறுதி முடிவுகள் தயார் செய்யப்பட்டன.

 

 

 

இத்தேர்வில் பொதுப்பிரிவினருக்கு 150-க்கு 90 மதிப்பெண்களும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினருக்கு 75 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும் எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 60 மதிப்பெண்கள் தகுதி வரம்பாக வைக்கப்பட்டது.

 

தேர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதமான www.trb.tn.gov.in வாயிலாக அடுத்த 5 நாட்களுக்குள் தங்களது தகுதிச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதுச்சேரியைச் சேர்ந்த தேர்வர்களுக்கு மதிப்பெண்கள் மட்டுமே டி.ஆர்.பி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன; அவர்களுக்கான தகுதிச் சான்றிதழ்கள் புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை மூலமாக தனியாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon