--- --:--:-- --

வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு..!

2

வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

 

1972 முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து 1982 முதல் 1988 வரை சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவன தலைவராக பதவி வகித்துள்ளார். பத்மபூஷண், எஸ்.எஸ்.பர்நாகர் உள்ளிட்ட விருதுகளையும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுள்ளார். மேலும் இந்தியா மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவு குறித்து, முதல்வர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில் கூறியிருப்பதாவது: நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த அவர் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

 

அவரது இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon