எலும்பை உடைச்சிருவேன் – மிரட்டிய அரசு கால்நடை மருத்துவர்
மரக்காணம் அருகே உள்ள கூனிமேடு ஊராட்சி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சதாசிவம் என்பவர் வளர்த்து வரும் பசு மாட்டிற்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது மகன் சந்துரு பசு மாட்டை சிகிச்சைக்காக அதே பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர் சங்கரநாராயணன் பசு மாட்டை பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளார்.
சிகிச்சை முடிந்ததும் நாளைக்கு எத்தனை மணிக்கு மாட்டை மறுபடியும் அழைத்து வர வேண்டும்? என்று சந்துரு மருத்துவரிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த சங்கரநாராயணன், சந்துருவை பார்த்து தகாத வார்த்தைகளால் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. 209 எலும்பையும் அடிச்சு உடைச்சிருவேன், உடம்பு மட்டும்தான் இருக்கும் தலை இருக்காது. உனக்கும் எனக்கும் 5 லட்சம் படி வித்தியாசம் நீ 5-ம் வகுப்பு நான் 50-ம் வகுப்பு படிச்சவன். என் படிப்பை படிக்க உனக்கு 2000 ஜென்மம் வேண்டும் என்று அடாவடியாக பேசியதாக கூறப்படுகிறது.
சந்துரு இச்சம்பவத்தை தன் செல்போனில் வீடியோ எடுப்பதைக் கண்ட மருத்துவர், வீடியோ எடுக்கக் கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சந்துரு, மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கால்நடை துறை அமைச்சர் கமலி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்களிடம் அத்துமீறிய சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பொதுமக்களிடம் அத்துமீறிய சம்பந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





